0

சிம்பு நேரில் ஆஜராக போலீஸ் அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு

சிம்பு நேரில் ஆஜராக போலீஸ் அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு

இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடியதாக ஒரு ஆபாச பாடல் இணையதளத்தில் அண்மையில் வெளியானது. இந்த பாடல் வரிகளில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமான பல வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது.


இதையடுத்து மாதர் சங்கங்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை தியாகராய நகரில் உள்ள சிம்புவின் வீட்டிற்கு முன்பு பெண்கள் அமைப்பினர் தினமும் போராட்டங்கள் நடத்துகின்றனர். பெண்களை இழிவுப்படுத்தி, ஆபாச பாடலை பாடிய சிம்பு, இசையமைத்த அனிருத் ஆகியோரை போலீசார் கைது செய்யவேண்டும் என்று கோரிக்கையுடன் போராட்டத்தில் பலர் ஈடுபடுகின்றனர்.


இந்த நிலையில், நடிகர் சிம்பு மற்றும் அனிருத் மீது பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக நாளை (19-ந் தேதி) ஆஜராகவேண்டும் என்று சிம்பு, அனிருத் ஆகியோருக்கு ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.


இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு மூத்த வக்கீல் முத்துகுமாரசாமி ஆஜராகி, ‘நடிகர் சிம்பு மீது கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக 19-ந் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று சிம்புக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். எனவே, இந்த வழக்கை ரத்து செய்யவும், போலீசார் அனுப்பியுள்ள இந்த சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி சிம்பு சார்பில் மனு தாக்கல் செய்துள்ளேன்.


இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்‘ என்று வாதிட்டார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் எமிலியாஸ், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என்று கூறினார். இதையடுத்து நீதிபதி, ‘இந்த அவசர வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறேன். அதேநேரம் இப்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்‘ என்று உத்தரவிட்டார்

Post a Comment

 
Top