சென்னை
முதல் பாண்டிச்சேரி வரை உள்ள கடலோரப் பகுதிகளில் தாதாவாக வலம் வருகிறார்
தம்பிராமையா. ரவுடிகள் மட்டுமின்றி போலீஸ்காரர்களும் அஞ்சும் அளவிற்கு
பெரிய ஆளான இவருக்கு பேய் என்றால் பயம். இந்த பேய் பயத்தால் இவரது மனைவி
இவரை விட்டு செல்கிறார்.
பிளாக் பாண்டி உள்ளிட்ட நான்கு பேரை தன் அடியாட்களாக வைத்திருக்கும்
தம்பி ராமையா, சாவுக்கு பயப்படாத ஒருவனை தன்னுடன் வைத்துக் கொண்டால் நாம்
பேய்க்கு பயப்பட தேவையில்லை என்று நினைக்கிறார். இந்நிலையில், வாழ
பிடிக்காமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நாயகன்
ஜீவரத்னத்தை சந்திக்கிறார்.
இவரை தற்கொலை செய்யவிடாமல் தன்னுடன் வைத்துக் கொள்கிறார் தம்பி ராமையா.
தம்பி ராமையாவிற்கு பேய் பயம் இருப்பதை அறிந்த ஜீவரத்னம் அவரின் பயத்தை
போக்குகிறார். மேலும் பேய் ஓட்டுவதற்கு தம்பி ராமையாவை அழைக்கும் அளவிற்கு
தைரியத்தை கொடுக்கிறார்.
ஒரு விபத்தில் ஜீவரத்னம் சாவின் விளிம்பு வரை சென்று உயிர்
பிழைக்கிறார். அதன் பின் இவருக்கு நான்கு பேய்கள் கண்ணுக்கு தெரிகின்றன.
பேயே இல்லை என்று சொல்லி வந்த இவருக்கு பேய்கள் தெரிவது ஆச்சரியமடைகிறார்.
இறுதியில் அந்த பேய்கள் யார்? எதற்காக ஜீவரத்னம் கண்களுக்கு மட்டும்
தெரிகிறது? அந்த பேய்களால் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஜீவரத்னம் அப்பாவி இளைஞனாகவும், பேய்கள் பிடித்த பிறகு ஆக்ரோஷமாகவும், வெகுளித்தனமாகவும் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஈசான்யாவிற்கு அதிக வேலை இல்லை. நாயகனை
காதலிப்பது, அவருக்குள் பேய் வந்தவுடன் அவரை விட்டு விலகுவது என நடிப்பை
வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்திற்கு பெரும் பலம் தம்பி ராமையாவின் நடிப்பு. ஒரு நாயகனுக்கு
நிகரான கதாபாத்திரத்தை சுமந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்களை
ரசிக்க வைக்கிறார். இவரும் மொட்டை ராஜேந்திரனும் ஆடும் பாடல் ரசிக்க
வைக்கிறது. 15 நிமிடமே வந்தாலும் ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்
மொட்டை ராஜேந்திரன்.
பேய் படங்கள் பல வந்திருந்தாலும் இப்படத்தில் சில திருப்பங்களை வைத்து
வேறுபடுத்தி காட்டியிருக்கிறார் இயக்குனர் கண்மணி. திரைக்கதையின் நீளத்தை
குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். கிளை கதைகளையும்
தவிர்த்திருக்கலாம்.
மரியா ஜெரால்டு இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. தம்பி ராமையா,
மொட்டை ராஜேந்திரன் ஆடும் பாடல் குத்தாட்டம் போட வைக்கிறது. பின்னணி
இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மல்லிகார்ஜூனின் ஒளிப்பதிவு
படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘பேய்கள் ஜாக்கிரதை’ மிரட்டல்.
Post a Comment