0

Bhoolohamசென்னையில் 1948-ல் இருந்து இரண்டு ஏரியாக்களுக்கிடையே பாக்சிங் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜெயம் ரவி சிறுவயதில் இருக்கும்போது அவருடைய அப்பா, எதிராளியுடன் பாக்சிங்கில் போட்டியிருக்கிறார்.
இதில் தோற்கும் ஜெயம்ரவியின் அப்பா, அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ஜெயம்ரவி சிறு வயதில் இருந்தே பெரிய பாக்சராகி எதிராளியின் மகனை தோற்கடித்து பழியை தீர்க்க வேண்டும் என்ற கொள்கையோடு வளர்கிறார்.
இந்நிலையில், டிவி சேனல் நடத்தி வரும் பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவியின் வெறியை வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார்.
ஜெயம் ரவிக்கும் எதிராளிக்கும் இடையே பெரும் போட்டியை ஏற்பாடு செய்கிறார். இதற்காக ஜெயம் ரவியுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்.
இந்த போட்டியில் ஜெயம் ரவி வெற்றி பெறுகிறார். இந்த போட்டியின்போது தன்னால் தாக்கப்பட்ட எதிராளி, உயிர்போகும் நிலைக்கு ஆளாவதைக் கண்டு மனம் இறங்குகிறார் ஜெயம் ரவி. இதனால், இனி பாக்சிங் வேண்டாம் என்று முடிவுக்கு வருகிறார். மேலும் எதிராளியை காப்பாற்றும் முயற்சியிலும் ஜெயம் ரவி ஈடுபடுகிறார்.
ஜெயம் ரவியை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்திருக்கும் பிரகாஷ் ராஜ் இதனை அறிந்து அவரை மீண்டும் பாக்சிங்கில் ஈடுபடுத்த பல சதி வேலைகளை செய்கிறார். இறுதியில் பிரகாஷின் சதி திட்டத்தை ஜெயம்ரவி அறிந்துக் கொண்டாரா? மீண்டும் பாக்சிங்கில் ஜெயம் ரவி ஈடுபட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, பாக்சிங் வீரருக்கு தேவையான உடற்கட்டு பெற்று கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
சண்டை காட்சிகளில் நிஜ பாக்சிங் வீரர்களே தோற்றுப் போகும் அளவிற்கு ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். இவருடைய கடின உழைப்புக்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.
நாயகியாக நடித்திருக்கும் திரிஷா, கல்லூரி மாணவியாகவும் ஜெயம் ரவியின் ரசிகையாகவும் நடித்திருக்கிறார். ஜெயம் ரவி மீதுள்ள காதலால் உடம்பில் பச்சை குத்துவது அவரை துரத்தி துரத்தி காதலிப்பது என சிறப்பாக நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வழக்கம் போல் வில்லத்தனத்தில் மிரட்டி ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார் பிரகாஷ் ராஜ். இரண்டாம் பாதியில் களமிறங்கும் ஹாலிவுட் பாக்ஸர் நாதன் ஜோன்ஸ், தனது உருவத்தாலேயே மிரட்டுகிறார். ஜெயம் ரவியும் இவரும் சண்டை போடும் காட்சிகள் சீட்டின் நுனிக்கே ரசிகர்களை இழுக்கிறது.
பாக்சிங்கை மையமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் விளையாட்டு வீரர்களை வியாபார பொருளாக்கி வருகிறார்கள் என்பதை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
எஸ்.பி.ஜனநாதனின் வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஜெயம் ரவி பேசும் வசனங்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படம் வெளிவந்திருந்தாலும் ரசிகர்களை துளிகூட ஏமாற்றவில்லை என்றே சொல்லலாம்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் கானா பாடல்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, மரணகானா மற்றும் தீம் சாங் மீண்டும் ஒருமுறை கேட்கத் தூண்டியிருக்கிறது. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார்.
சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒளிப்பதிவு செய்த விதம் அருமை.
மொத்தத்தில் ‘பூலோகம்’ ரசிகர்களை பூர்த்தி செய்யும்.

Post a Comment

 
Top