ஆனால், அவரது மனைவிக்கு நான்காவது குழந்தையும் பெண் குழந்தையாகவே பிறக்கிறது. இதனால், விரக்தியடைகிறார் கருணாஸ்.
கணவன் மிகவும் வருத்தத்தில் இருப்பதை உணர்ந்த கருணாஸின் மனைவி, அந்த குழந்தையை கூவம் ஆற்றுக்கு அருகில் போட்டுவிட்டு, குழந்தை இறந்துவிட்டதாக கருணாஸிடம் கூறுகிறார். ஆனால், இதை கருணாஸ் நம்ப மறுக்கிறார். மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு குழந்தையை தேடி செல்கிறார்.
இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து வரும் தனது பள்ளிக்கு வரவேண்டிய நிதி தடை செய்யப்பட இருக்கிறது என்று அறியும் பாதிரியார் சுரேஷ், இவரது பள்ளிக்கு நிதி கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு எடுக்க வருபவரை கவரும்படி ஏதாவது செய்தால் தனது பள்ளிக்கு வரவேண்டிய நிதி வந்துசேரும் என்று நம்புகிறார். இதற்காக பள்ளியில் படிக்கும் கென் மற்றும் ஐந்து மாணவர்களை வைத்து ஒரு நாடகம் நடத்தி அவரை கவர முடிவு செய்கிறார்.
அப்போது மாணவர்கள் அனைவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் நாளில் இயேசு பிறப்பை மையமாக வைத்து ஒரு நாடகத்தை நடத்த முடிவெடுக்கின்றனர்.
இந்த நாடகத்தில் இயேசுவாக பிறக்கும் குழந்தைக்கு பொம்மைக்கு பதிலாக நிஜத்திலேயே ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தேடி அலையும் மாணவர்கள் கையில், கருணாஸின் மனைவி விட்டுச்சென்ற பெண் குழந்தை கிடைக்கிறது. இதை அவர்கள் எடுத்துச் செல்கிறார்கள்.
மறுமுனையில், செஸ் விளையாட்டில் சாம்பியனான கிரிஷாவை, சக விளையாட்டு வீரர் காதலித்து, கர்ப்பமாக்கிவிட்டு, ஏமாற்றிவிடுகிறார். இதனால், கிரிஷா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது தற்கொலை செய்ய முயல்கிறாள்.
அவளை தற்கொலையில் இருந்து காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார் கருணாஸ். அங்கு அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. அதேவேளையில், செஸ் போட்டி ஒன்று தொடங்க, அதில் அவள் கலந்துகொண்டு தன்னை ஏமாற்றியவனை நேருக்கு நேர் மோதி வெற்றி பெற திட்டமிடுகிறார்.
அதேநேரத்தில், கனடாவில் இருந்து வரும் அகில் மற்றும் ரித்விகா தம்பதிகள் தீவிரவாத தாக்குதலில் தங்களது குழந்தையை இழந்து மனமுடைந்து வாழ்கின்றனர்.
மறுபுறம், நாடகம் நடத்தும் மாணவர்களில் ஒருவனுடைய அப்பாவான நரேனும், அவரது மனைவியும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் நிற்கின்றனர்.
அப்பா, அம்மாவின் மனம் மாறவேண்டும் என்று நினைக்கும் அந்த மாணவன் ஏங்கி நிற்கிறான். இறுதியில், தனித்தனி சூழலில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களை ஒரே இடத்தில் வைத்து கதையை முடித்திருக்கிறார்கள்.
எத்தனையோ பேர் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் இக்காலத்தில் பல குழந்தைகள் அனாதையாக்கப்பட்டு தூக்கியெறிப்படுவது, குழந்தைக்காக கோவில் கோவிலாக சுற்றாமல் அனாதை இல்லங்களை சுற்றினாலே போதும் என ஒற்றை வரியில் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.
இப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவர்களும் தங்களின் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக மாணவர்களின் நடிப்பு அனைவரையும் கவர்கிறது. படத்தின் முக்கிய பலமே கருணாஸ்தான். இவர் வரும் ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் தத்ரூபமான நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது குழந்தையை தூக்கி வீசிய மனைவியை அடித்து உதைக்கும் காட்சிகளில் பளிச்சிடுகிறார்.
ரித்விகா, அகில் ஆகியோர் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதிந்து விடுகின்றனர். செஸ் விளையாட்டு வீராங்கனையாக வரும் கிரிஷா புதுமுகமாக இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார்.
தம்பி ராமையா, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோரும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குத்துப்பாட்டு, அறிமுக பாடல் என இல்லாமல் குடும்பத்துடன் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சார்லஸ்.
விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், வேத்சங்கரின் இசையும் பக்கபலமாக இருந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அழகு குட்டி செல்லம்’ அனைவருக்கும் செல்லம்.
Post a Comment