0

simbu-beep-song.jpg.image.784.410நடிகர் சிம்பு பாடி அனிருத் இசை அமைத்ததாக கூறப்படும் ‘‘பீப்’’ பாடல் ஒன்று கடந்த 11–ந்தேதி யூடியூப் இணையத்தளத்தில் வெளியானது. காதலை பற்றிய இந்த பாடல் இணையத்தளத்தில் இருந்து ‘‘வாட்ஸ்–அப்’’பில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பீப் பாடலின் முதல் வரியே அதிர்ச்சி தரும் வகையில், முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருக்கிறது. அந்த பாடலில் இடம் பெற்றுள்ள, வெளியில் சொல்ல முடியாத அசிங்கமான வார்த்தையை ‘‘பீப்’’ ஒலி மூலம் மறைத்து இருந்தாலும், அது என்ன வார்த்தை என்று தெரியும் வகையில் உள்ளது.

இந்த பீப் பாடல் பெண்களை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோவை, சென்னை உள்பட பல ஊர்களில் சிம்பு, அனிருத் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அதோடு அவர்களை கைது செய்யக் கோரி போராட்டங்களும் நடந்தன.

நடிகர் சிம்பு இதுபற்றி முதலில் விளக்கம் அளித்த போது, ‘‘பீப் பாடலை பாடியது தனது தனிப்பட்ட விருப்பம்’’ என்றார். இதனால் அவருக்கு எதிர்ப்பு வலுத்தது. இதைத் தொடர்ந்து அவர் தனது பீப் பாடலை யாரோ திருடி இணையத்தளத்தில் பதிவு செய்து விட்டதாக கூறினார்.

இந்த விளக்கத்தில் சமரசம் அடையாத பல்வேறு அமைப்புகள் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடர்ந்தன. அவற்றை விசாரித்த ஐகோர்ட்டு, சிம்பு, அனிருத் இருவரும் ஜனவரி முதல் வாரம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. என்றாலும் பீப் பாடல் சர்ச்சை ஓயவில்லை.

இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பீப் பாடல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். யூடியூப் நிர்வாகத்துக்கு 2 தடவை கடிதம் எழுதினார்கள். யூடியூப் இணையத்தளத்தில் இருந்து அந்த பீப் பாடலை அகற்ற கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் சென்னை போலீசாரின் கோரிக்கையை ஏற்க யூடியூப் நிர்வாகம் மறுத்து விட்டது. ‘‘சிம்பு பாடிய பீப் பாடலில் என்ன தவறு உள்ளது? முதலில் எங்களுக்கு விளக்கி சொல்லுங்கள்’’ என்று யூடியூப் நிர்வாகம் கேட்டது.

சென்னை குற்றப்பிரிவு போலீசாருக்கு இதனால் தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. என்றாலும் சிம்புவின் பீப் பாடலில் இடம் பெற்றுள்ள அந்த வார்த்தையை யூடியூப் இணையத்தள அதிகாரிகளிடம் போலீசார் விளக்கி கூறினார்கள். அதை கேட்ட யூடியூப் நிர்வாகம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.

அந்த பாடலில் உள்ள கெட்ட வார்த்தை ‘பீப்’ ஒலியால் மறைக்கப்பட்டுள்ளதால் அதை இணையத்தளத்தில் இருந்து அகற்ற வேண்டிய தில்லை என்று கூறி விட்டதாக தெரிகிறது. இது சென்னை குற்றப்பிரிவு போலீசாரை திணற வைத்துள்ளது.

நடிகர் சிம்பு, அவரது தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா மூவரும் அந்த பீப் பாடல் திருடி வெளியிடப்பட்டுள்ளது என்று கண்ணீர் மல்க விளக்கம் அளித்து விட்டனர். போலீசாரிடமும் அதை தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பீப் பாடல் சிம்புவிடம் இருந்து வெளியில் கசிந்து, எப்படி யூடியூப்புக்கு போனது என்ற விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சிம்புவின் நண்பர்கள், அவரது எதிரிகள் இரு தரப்பினர் மீதும் போலீசாரின் சந்தேகப்பார்வை பதிந்துள்ளது. வாட்ஸ்–அப் வழியாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவி, பரவி அது சிம்புவை பிடிக்காத யாரோ ஒருவரது வாட்ஸ் அப்–க்கு சென்றிருக்கலாம் என்றும், அவர் வெளிநாட்டில் இருந்து அந்த பீப் பாடலை யூடியூப்பில் ஏற்றியிருக்கலாம் என்கிறார்கள்.

போலீசார் நடத்தும் விசாரணையில் பீப் பாடலை பதிவேற்றம் செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க இயலாத நிலை உள்ளது. யூடியூப் இணையத்தளம் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும். இதனால் பீப் பாடல் விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

பீப் பாடலை யூடியூப்பில் இருந்து அகற்ற முடியாத நிலையில், அதை வெளியிட்டவரையும் கண்டுபிடிக்க இயலாததால், இந்த விவகாரத்தில் அடுத்து எத்தகைய நடவடிக்கையை மேற் கொள்வது என்று போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

இதற்கிடையே பீப் பாடல் பரபரப்பு உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பீப் பாடலில் அப்படி என்னதான் வார்த்தை இடம் பெற்றுள்ளது என்று பலரும் இணையத்தளத்தை நாடியுள்ளனர். அந்த வகையில் இதுவரை சுமார் 10 லட்சம் பேர் யூடியூப்பில் பீப் பாடலை கேட்டுள்ளனர்.

யூடியூப் இணையத்தள வரலாற்றில் சமீபத்தில் எந்த ஒரு பாடலும் இந்த அளவுக்கு ‘‘ஹிட்’’ ஆனதில்லை. யூடியூப்பில் அதை கேட்ட பலர் அதை பதிவு செய்து மற்ற இணையத்தளங்களிலும் பரவ விட்டுள்ளனர்.

எனவே சிம்புவின் அந்த பீப் பாடலை இனி அகற்ற இயலாது என்று சொல்லும் அளவுக்கு இணையத்தளங்களிலும் வாட்ஸ்அப் குரூப்களிலும் பரவி வியாபித்து விட்டது.

சிம்புவின் பீப் பாடலை முதன் முறையாக கேட்பவர்களில் பாதி பேர் எதிர்க்கிறார்கள். பாதி பேர் ‘‘விட்டுத் தள்ளுங்கள்’’ என்ற ரீதியில் சிம்புவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். தமிழ்த் திரை உலகமும் சிம்புவை ஆதரிப்பதிலும், எதிர்ப்பதிலும் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.

குறிப்பாக உஷா ராஜேந்தர் கண்ணீர் மல்க விளக்கம் தெரிவித்த பிறகு பலரது மனம் இளகியுள்ளது. சிம்புவை மன்னிக்கலாம் என்று சினிமா உலக பிரபலங்களும், வி.ஐ.பி.க்களும் கூறி வருகிறார்கள். ஆனாலும் சிம்புவுக்கு எதிரான சிலர் இந்த பீப் பாடல் விவகாரத்தில் வேண்டும் என்றே வதந்திகளை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.

சிம்பு, அனிருத் மீதான புகார் பற்றி நாங்கள் நடத்தும் விசாரணையில் யூடியூப் நிர்வாகம் ஒத்துழைத்தால் மட்டுமே உண்மையான குற்றவாளி யார் என்பது தெரிய வரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதனால் சிம்புவின் பீப் பாடல் விவகாரம் தொடர்ந்து எரிமலையாக குமுறியபடியே உள்ளது.

Post a Comment

 
Top