திருநெல்வேலி
ஜில்லாவில் கொக்கிரகுளம் என்ற ஊரில் பெரிய ரவுடியாக இருந்து வருகிறார்
ஜவஹர். இவர் அந்த ஏரியாவில் உள்ள போலீஸை கைக்குள் போட்டுக்கொண்டு,
கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத குற்றங்களை செய்து
வருகிறார்.
இதே ஊரில் நாயகர்கள் அருண்குமார், இப்ராஹிம் மற்றும் அவரது 3
நண்பர்களும் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் யாரும் இல்லாத
அனாதைகள்.
இவர்களில் நாயகன் அருண்குமாரும், அதேஊரில் வசிக்கும் நாயகி மேனகாவும் சிறுவயதில் இருந்தே காதலித்து வருகிறார்கள்.
ஒருநாள் நாயகியின் நெருங்கிய தோழியான சுமதி, பள்ளி தேர்வில்
தோல்வியடைந்ததற்காக வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்ளப்
போகிறார். அந்த நேரத்தில் அங்கு திருட வரும் இப்ராஹிம், தற்கொலை முயற்சியை
தடுத்து, திட்டிவிட்டு செல்கிறார்.
அதே நேரத்தில் அவளுடைய தோழி அங்கு வந்து, அவள் பள்ளி தேர்வில்
தேர்ச்சியடைந்துவிட்டதாகவும், தவறுதலாக தோல்வி அடைந்துவிட்டதாக
கூறிவிட்டதாகவும் கூறுகிறார்.
இதனால், தன்னை சரியான நேரத்தில் தற்கொலையில் இருந்து காப்பாற்றிய நாயகன்
இப்ராஹிம் மீது சுமதிக்கு காதல் வருகிறது. பெண்கள் என்றாலே பிடிக்காத
இப்ராஹிமும் ஒருகட்டத்தில் அவளை காதலிக்க தொடங்குகிறார்.
இந்நிலையில், ஒருநாள் நாயகி சுமதி சாலையில் செல்லும்போது, ரவுடி ஜவஹர்
மற்றும் அவரது ஆட்கள் சென்ற கார் அவள்மீது எதிர்பாராத விதமாக
மோதிவிடுகிறது.
பாதி உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் அவளை காப்பாற்றாமல் சாலையின்
ஓரத்தில் தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார்கள். மறுநாள் ஊரார் எல்லோரும்
சென்று பார்க்கும்போது அவள் இறந்து போய் கிடக்கிறாள்.
தனது காதலி விபத்தில் இறந்துவிட்டாளே என்ற சோகத்தில் நாயகன் இப்ராஹிம்
வாழ்வதற்கே விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள எண்ணுகிறார்.
இந்நிலையில், சுமதி விபத்தில் சாகவில்லை என்றும் அவளுடைய சாவுக்கு ஜவஹர்
மற்றும் அவரது ஆட்கள்தான் காரணம் என்று தெரியவருகிறது. தனது காதலியை கொன்ற
ஜவஹர் மற்றும் அவரது ஆட்களையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து பழிதீர்க்க
முடிவெடுக்கிறார்.
இறுதியில், நாயகன் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அவர்களை வீழ்த்தினார்களா? அல்லது அவர்களிடம் வீழ்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகர்கள் அருண்குமார், இப்ராஹிம் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும்
மண்ணின் மணம் மாறாமல், படம் முழுக்க லுங்கியுடனே வலம் வருகிறார்கள்.
இவர்களில் அருண்குமார் நாயகி மேனகாவுடன் ரொமான்ஸ் காட்சியில் ரசிக்க
வைக்கிறார்.
இப்ராஹிம் ஆரம்பத்தில் பெண்கள் மீது வெறுப்பு கொள்பவராகவும், பின்னர்
சாந்தமாகி நாயகியை காதலிப்பதும், பின்னர் காதலியின் சாவுக்கு காரணமானவர்களை
பழிவாங்கும் போதும் ஓரளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இவரே படத்தின் இயக்குனர் என்பதால், தன்னுடைய தேவைக்கு தகுந்தாற்போல்
காட்சிகள் வைத்து, அதில் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக
வரும் சுமதி, ஒருசில காட்சிகளே வந்தாலும் சுமாராக நடித்திருக்கிறார்.
வில்லனாக வரும் நாசரின் தம்பி ஜவஹர், தோற்றத்தில் நாசரைப் போன்றே
இருக்கிறார். ஆனால், நடிப்பில் அண்ணனிடம் இன்னும் கொஞ்சம் கற்றுக்
கொள்ளவேண்டும்.
இயக்குனர் இப்ராஹிம் தமிழ் சினிமாவில் வழக்கமான கிராமத்து காதல் கதை,
அதைத் தொடர்ந்து வரும் வன்மம் ஆகியவற்றையே இப்படத்திலும் கதையாக
வைத்திருக்கிறார்.
படத்தில் நிறைய காட்சிகள் ரொம்பவும் செயற்கையாக இருக்கிறது. ஒருசில
காட்சிகளைவிட பெரும்பாலான காட்சிகள் அதரபழசாகவே இருப்பதால், படத்தை வெகுவாக
ரசிக்க முடியவில்லை.
ராம்நாத் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம்
செலுத்தியிருக்கலாம். விஜய் ஆனந்த் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் ரசிக்க
வைக்கின்றன.
Post a Comment