0
தங்க மகன்


கதாநாயகன்-கதாநாயகி: தனுஷ், சமந்தா, எமிஜாக்சன்.

டைரக்ஷன்: வேல்ராஜ்.

கதையின் கரு: அப்பாவின் மரணத்துக்கு காரணமானவரை கண்டுபிடிக்கும் மகன்.

கே.எஸ்.ரவிகுமார்-ராதிகா சரத்குமார் தம்பதியின் மகன், தனுஷ். நண்பர்களும், ஜாலியுமாக இருக்கும் தனுஷ், ஒரு கோவிலில் எமிஜாக்சனை சந்திக்கிறார். காதல் கொள்கிறார். தினமும் பின்தொடர்ந்து சென்றதில், தனுஷ் மீது எமிஜாக்சனும் காதலில் விழுகிறார். இருவரும் தங்கள் காதலின் முதல் ஆண்டை கொண்டாடுவதற்காக டார்ஜிலிங் போகிறார்கள். போன இடத்தில் இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள்.

எமிஜாக்சன், தனுசின் அத்தை மகனும், நண்பருமான ஆதித்தை மணக்கிறார். தனுஷ் காதல் தோல்வியை ஜீரணித்துக் கொண்டு அப்பா அலுவலகத்திலேயே வேலைக்கு சேர்கிறார். அப்பாவும், அம்மாவும் பார்த்த சமந்தாவை திருமணம் செய்து கொள்கிறார்.

இந்த நிலையில், ஞாபக மறதி நோயுள்ள கே.எஸ்.ரவிகுமார் திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அவர் மீது திருட்டுப்பழி விழுவதுடன், தனுசுக்கு வேலையும் பறிபோகிறது. அவருடைய மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார், தனுஷ். அதில், கே.எஸ்.ரவிகுமாரிடம் உயர் அதிகாரி ஜெயப்பிரகாஷ் கொடுத்த ரூ.5 கோடி பணம் பற்றி தெரியவருகிறது. அந்த பணத்தை அத்தை மகன் மோசடி செய்ததால்தான் அப்பா தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரத்தை தனுஷ் தெரிந்து கொள்கிறார்.

உயர் அதிகாரி ஜெயப்பிரகாசுக்கும், அத்தை மகன் ஆதித்துக்கும் தனுஷ் எப்படி பாடம் புகட்டி, தனது தந்தை மீதான திருட்டுப்பழியை துடைக்கிறார்? என்பது மீதி கதை.

மீசையில்லாத ஜாலி இளைஞர், அப்பா மீது பாசம் கொண்ட மகன் என இரண்டு விதமான தோற்றங்களில், தனுஷ். ஒரே பார்வையில் எமிஜாக்சனிடம் மனதை பறிகொடுப்பது; தொடர் முயற்சியால் காதலை சம்பாதிப்பது; உதட்டுடன் உதடு சேர்த்து முத்தங்களை பரிமாறிக் கொள்வது என தனுஷ் ரசிகர்களுக்கு நிறைய இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.

சமந்தாவுடனான ஒட்டல்-உரசல் காட்சிகளில், அவர் இன்னும் கிளுகிளுப்பூட்டுகிறார். அடியாட்களை ஒரே அடியில் வீழ்த்தும் சண்டை காட்சிகளில், நிமிர்ந்து உட்கார வைக்கிறார். ‘‘தமிழ்நாட்டில் ஜப்பனீஷ் தோற்கலாம், இத்தாலி தோற்கலாம், ஸ்பானிஷ் தோற்கலாம். தமிழ் மட்டும் தோற்கவே தோற்காது’’ என்று சூப்பர் ‘பஞ்ச்’ அடித்து, கைதட்ட வைக்கிறார்.

சிரிக்கும் காட்சியிலும், அழுகிற காட்சியிலும் ஒரே மாதிரி தெரிகிறார், சமந்தா. சின்ன இடையும், அகல சிரிப்புமாக வரும் எமிஜாக்சன், படத்தின் முதல் பாதி முழுக்க தனுசுக்கு மூச்சு முட்ட முத்தம் கொடுக்கிறார். இரண்டாம் பாதியில், வில்ல கணவனுக்கு எதிராக மாறி, தியேட்டரில் ஆதரவை அள்ளுகிறார். 

அப்பா வேடத்தில், கே.எஸ்.ரவிகுமார் கச்சிதமாக பொருந்துகிறார். அம்மாவாக ராதிகா சரத்குமார். ‘‘உங்க அப்பாவை கொன்னவன் முகத்தை ஒரு தடவை பார்க்கணும்...’’ என்று பொங்கி எழுகிற ஒரு காட்சி போதும். ராதிகா ராதிகாதான். ஜெயப்பிரகாஷ், ஆதித் இருவரும் அதிகம் மிரட்டாத வில்லன்கள். காமெடியும் இல்லாமல், குணச்சித்ர நடிப்பும் இல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர் எதற்கு?

பாடல்களிலும், பின்னணி இசையிலும் மென்மையான ராகங்கள். ‘வேலையில்லா பட்டதாரி’யில் அம்மா பாசத்தை முன் நிறுத்திய டைரக்டர் வேல்ராஜ், இந்த படத்தில் அப்பா பாசத்தை கருவாக்கி இருக்கிறார். கே.எஸ்.ரவிகுமாரின் மறதி நோய்க்கும், அவருடைய மரணத்துக்கும் முடிச்சு போட்டு உயிரோட்டமாக கதை சொல்ல முயற்சித்து இருக்கிறார். 

இடைவேளை வரை காதலும், கலகலப்புமாக நகரும் கதை. இடைவேளைக்குப்பின், எதிர்பார்ப்புடன் பயணிக்கிறது. கொட்டும் மழை, சமந்தாவின் பிரசவ வேதனை, தனுசுடன் மோதும் வில்லனின் அடியாட்கள் என ‘கிளைமாக்ஸ்,’ பல படங்களில் பார்த்து ரசித்தது.

Post a Comment

 
Top