0
உறுமீன்

கதாநாயகன்-கதாநாயகி:

பாபிசிம்ஹா-ரேஷ்மி மேனன்.

டைரக்ஷன்: சக்திவேல் பெருமாள்சாமி.

கதையின் கரு: ஜென்மம் ஜென்மமாக தொடரும் பகை.

1939-ம் ஆண்டில் கதை ஆரம்பிக்கிறது. தமிழக-கேரள எல்லையில் வசிக்கும் படித்த இளைஞரான பாபிசிம்ஹா, ஒரு வெள்ளைக்கார துரையுடன் வேட்டைக்கு சென்ற இடத்தில், காலத்தை முன்கூட்டியே நிர்ணயிக்கும் அபூர்வ புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த சம்பவங்கள், பாபிசிம்ஹா வாழ்க்கையில் நடக்கிறது. 

பாபிசிம்ஹா, துரையின் பகையை சம்பாதிக்கிறார். துரை திட்டமிட்டு பாபிசிம்ஹாவை கொல்கிறார். அவர் கொலை செய்யப்படுவதற்கு எட்டப்பனாக இருந்து துரோகம் செய்கிறார், நண்பரான கலையரசன். இந்த துரோகம் ஜென்மம் ஜென்மமாக தொடர்கிறது.

அடுத்த ஜென்மத்தில் பாபிசிம்ஹா, ஒரு ‘பி.ஈ.’ பட்டதாரி. அவருக்கு ஒரு ‘கால் சென்டரில்’ வேலை கிடைக்கிறது. அங்கு தன்னுடன் படித்த ரேஷ்மி மேனனை சந்திக்கிறார். இருவருக்கும் காதல் வருகிறது. அடியாட்களை வைத்து வங்கி கடனை வசூல் செய்யும் கலையரசனின் தம்பி, ரேஷ்மி மேனன் மீது ஆசைப்படுகிறார். அவரை பாபிசிம்ஹா எச்சரிக்க செல்கிறார். 

அப்போது கலையரசனின் தம்பி ஒரு மர்ம ஆசாமியால் கொலை செய்யப்படுகிறார். சந்தேகத்துக்குள்ளான அத்தனை பேரையும் கலையரசன் கடத்தி வருகிறார். அவர்களில், பாபிசிம்ஹாவும் ஒருவர். இரண்டு பேருக்குமான ஜென்ம பகை எப்படி முடிவுக்கு வருகிறது? என்பதே கதை.

ஜென்ம ஜென்மமாக வீரராக இருக்கும் ஒரு கனமான கதாபாத்திரத்தில், பாபிசிம்ஹா. முக சாயலில் மட்டுமல்லாமல் நடை-உடை-பாவனைகளிலும் அந்தக்கால ரஜினிகாந்த் போலவே தெரிகிறார். அவருக்கும், ரேஷ்மி மேனனுக்குமான காதலும், இரண்டு பேர் தொடர்பான காட்சிகளும் குறைவு என்றாலும், ஜோடி பொருத்தம் கச்சிதம்.

கதாநாயகன் பாபிசிம்ஹா என்றாலும் நடிப்பில் அவரை மிஞ்சுகிறார், வில்லன் கலையரசன். கண்களிலேயே வில்லத்தனத்தை காண்பிக்கிறார். அப்புக்குட்டி, காளி வெங்கட், சார்லி, மனோபாலா, சித்தன் மோகன் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் பொருந்துகிறார்கள்.

காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப நகர்ந்து இருக்கிறது கேமரா. ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவு, கவனம் ஈர்க்கிறது. அச்சுவின் பின்னணி இசை, பெரும்பாலான இடங்களில் காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்திருக்கிறது. ‘கிளைமாக்ஸ்’சில், பேரிரைச்சல்.

மூன்று ஜென்மங்களில் சம்பவங்கள் நடப்பது போல் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் சக்திவேல் பெருமாள்சாமி. ஆரம்ப காட்சியே படத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இடைவேளை வரை, அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பு. வெள்ளைக்கார துரை வேட்டைக்குப் போகும் காட்சிகளில், தொய்வு. படத்தின் உச்சக்கட்ட காட்சி, புத்திசாலித்தனமான யுக்தி. 

Post a Comment

 
Top