0
ஈட்டி


கதாநாயகன்-கதாநாயகி: அதர்வா-ஸ்ரீதிவ்யா.

டைரக்ஷன்: ரவிஅரசு.

கதையின் கரு: தேசிய விருதுக்கு குறி வைக்கும் ஒரு இளம் விளையாட்டு வீரரின் முயற்சிகளும், அதற்கு வரும் தடைகளும்...

அதர்வா, தடகள வீரர். தடை தாண்டி ஓடுதல் போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய அளவில் விளையாடும் தகுதியை பெறுகிறார். அவருடைய அப்பா ஜெயப்பிரகாஷ், சாதாரண போலீஸ்காரர். அதர்வாவுக்கு பயிற்சி அளிக்கும் ‘கோச்,’ ஆடுகளம் நரேன்.

தஞ்சையில் விளையாட்டும், நண்பர்களுமாக இருக்கும் அதர்வாவுக்கு சென்னையில் வசிக்கும் ஸ்ரீதிவ்யா மீது காதல் வருகிறது. தேசிய விளையாட்டு போட்டிக்காக சென்னைக்கு வரும் அதர்வாவுக்கும், கள்ள நோட்டு அடிக்கும் கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

அதர்வா உடம்பில் சின்ன கீறல் ஏற்பட்டால் கூட ரத்தம் நிற்காது. அப்படி ஒரு வியாதி. அதை தெரிந்து கொண்ட கள்ள நோட்டு கும்பல் அதர்வாவின் உயிருக்கு குறி வைக்கிறது. அந்த கொலை வெறியில் இருந்து அதர்வா தப்பினாரா, இல்லையா? அவருடைய காதல் என்ன ஆகிறது என்பது கதை.

‘பரதேசி’க்குப்பின், அதர்வாவுக்கு அடையாளம் சொல்லிக்கொள்கிற மாதிரி ஒரு படம். நடிப்பிலும், உடல்மொழியாலும் ஒரு தடகள வீரராக வாழ்ந்திருக்கிறார். நண்பர்களுடனான அரட்டை, ஸ்ரீதிவ்யாவை மிதமாக மிரட்டி செல்போனுக்கு ‘டாப்-அப்’ செய்து கொள்வது ஆகிய காட்சிகளில், அதர்வா சுவாரஸ்யம் கூட்டுகிறார்.

அதர்வா ஜோடியாக நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்தியிருக்கிறார், ஸ்ரீதிவ்யா. அழகும், இளமையும் கைகொடுத்து இருக்கிறது. அதர்வாவுக்கு அப்பாவாக போலீஸ்காரர் வேடத்தில், ஜெயப்பிரகாஷ். ஒரு நடுத்தர குடும்ப தலைவராக-மகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அப்பாவாக மனதில் அப்படியே பதிந்து விடுகிறார். ‘‘இன்ஸ்பெக்டருக்கும், சப்-இன்ஸ்பெக்டருக்கும் சல்யூட் அடித்து நான் வாழ்ந்துட்டேன். நீயாவது நேஷனல் லெவலில் ஜெயித்து ஒரு பெரிய வேலைக்கு வரணும்’’ என்று சொல்கிற இடத்தில், ஜெயப்பிரகாஷ் நெகிழவைத்து விடுகிறார்.

அதர்வாவுக்கு பயிற்சி கொடுக்கும் ‘கோச்’ ஆக ஆடுகளம் நரேன். அதர்வா தடம் மாறிப்போய் விடுவாரோ என்ற ஆதங்கத்தில் அவரிடம், ‘‘நீ வாங்கப்போற தங்கத்துல உங்க அப்பாவின் ஆசை மட்டுமல்ல...என் லட்சியமும் கலந்திருக்கு’’ என்று கூறும்போதும், ‘‘நம்ம கனவெல்லாம் கலைஞ்சு போச்சே...’’ என்று விம்மும்போதும், படம் பார்ப்பவர்களை நரேன் உலுக்கி விடுகிறார். 

கடைசி காட்சியில், அதர்வாவின் காக்கி சட்டையில் அணிந்திருக்கும் ‘புகழேந்தி’ என்ற ‘பேட்ஜ்’ஜை நரேன் பெருமையுடன் தடவிப் பார்க்கும் இடத்தில், கைதட்ட தோன்றுகிறது.

நல்ல போலீஸ் அதிகாரியாக செல்வா, ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக அழகம் பெருமாள், அதர்வாவின் நண்பர்களாக முருகதாஸ், கும்கி அஸ்வின் ஆகியோர் கதாபாத்திரங்களாக மனதில் பதிகிறார்கள்.

சரவணன் அபிமன்யூவின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்து இருக்கிறது. பாடல் காட்சிகள், வேகத்தடைகளாக அமைந்துள்ளன.

அதர்வா-முருகதாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளில் எந்த ஈர்ப்பும் இல்லை. அதர்வா-ஸ்ரீதிவ்யாவின் காதலை ரசிக்கிற மாதிரி படமாக்கியிருக்கிறார், டைரக்டர் ரவிஅரசு. அதேபோல் அதர்வாவுக்கு நரேன் பயிற்சி அளிக்கும் காட்சிகளும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.

காதலும், அதிரடியும் கலந்து விறுவிறுப்பாக கதை சொன்ன விதத்தில், திறமையான டைரக்டர்கள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார், ரவிஅரசு. 

Post a Comment

 
Top